சூரிய ஆற்றலை மின்சாரமாக மாற்றக்கூடியவை சூரிய மின் தகடுகள். இவை நீண்ட நேரம் சூரிய ஒளியில் வைக்கப்படுகின்றன. அப்போது சூரிய ஒளியுடன் சேர்ந்து புற ஊதாக் கதிர்களும் இவற்றின் மீது படுகின்றன. இதனால் இவற்றின் ஆயுட்காலம் குறைகிறது. எனவே சூரிய ஒளியை மட்டும் அனுமதித்து புறஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்தும்படியான படலங்களை, மின் தகடுகள் மீது பொருத்த வேண்டி உள்ளது.
தற்போது பெட்ரோலியப் பொருட்களில் இருந்து கிடைக்கும் படலங்கள் தான் பயன்படுகின்றன. ஆனால், இவற்றின் தயாரிப்பு, பயன்பாடு இரண்டுமே சுற்றுச்சூழலுக்கு தீங்கானவை.
எனவே சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத படலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள்.
நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தசில முக்கியப் பல்கலைக்கழகங்கள் இதற்குத் தீர்வு கண்டுள்ளன. தாவரங்களில் இருக்கும் நுண்ணிய செல்லுலோஸ் நார்களாலான 'நானோ செல்லுலோஸை' படலமாகப் பயன்படுத்தலாம். ஆனால், இதை அப்படியே பயன்படுத்த இயலாது.
எனவே, வெங்காயத்தாளில் இருந்து அந்தோசயனின் என்கின்ற ஒருவித சாயத்தை எடுத்தனர். இதை நானோ செல்லுலோஸ் உடன் கலந்து, ஒரு படலத்தை உருவாக்கினர்.
இதைப் புற ஊதாக் கதிர்களை வெளியிடக்கூடிய விளக்குக்கு முன்னால், 1,000 மணி நேரம் வைத்துச் சோதித்தார்கள். இந்தப் படலம் 99.9 சதவீதக் கதிர்களைத் தடுத்து நிறுத்தியது.