நிறைய பழங்களைச் சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், பழங்களைக் கடித்துச் சாப்பிட சோம்பல்பட்டுக் கொண்டோ, நேரமில்லை என்றோ, பழரசம் குடிக்கின்ற பழக்கம் பலரிடம் ஏற்பட்டுவிட்டது.
பழரசங்கள் குடிப்பது நல்லது தானே என்று கருதலாம். நல்லதுதான், ஆனால், சில தீமைகளும் உள்ளன. முதலாவதாகப் பழங்களை அப்படியே சாப்பிடும்போது நார்ச்சத்து கிடைக்கிறது. அடுத்ததாகப் பழரசங்களில் உள்ள சர்க்கரை, ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டும் ஏற்கனவே அறியப்பட்டவை தான். புதிதாக ஒரு பிரச்னை இருப்பதை அமெரிக்காவில் உள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலை தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வில் 18 - 35 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியமான 14 நபர்கள் சோதிக்கப்பட்டனர். அவர்களுக்கு 14 நாட்கள் தொடர்ந்து மற்ற உணவுகளுடன் பழரசம் தரப்பட்டது. இதில் அவர்கள் வாயிலும் குடலிலும் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து, தீய பாக்டீரியாக்கள் அதிகரிப்பது கண்டறியப் பட்டுள்ளது.
பழரசத்தில் உள்ள அதிகமான சர்க்கரையால், வாயில் உள்ள கிருமிகள் பெருகிவிடுவதே இதற்குக் காரணம். இந்தக் கிருமிகளால் பல்வேறு உடல் நலக் கோளாறு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகவே, பழரசங்களைக் குடிப்பதை விட, பழங்களை உடைத்து கூழாக்கி, சதைப்பகுதியை வடிகட்டிவிடாமல் அப்படியே சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று கூறுகின்றனர்.