சில பறவைகள் கூடுகள் கட்டும்போது பாம்பின் உதிர்ந்த தோலை, அதாவது சட்டையை பயன்படுத்துகின்றன. உலகம் முழுதும் பல்வேறு இடங்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், அதற்கான காரணம் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை.
தற்போது விஞ்ஞானிகள் குழு ஒன்று இது தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில், அமெரிக்க ராபின் பறவைகளில் கூடுகளை எடுத்துக் கொண்ட ஆய்வாளர்கள், சில கூடுகளில் பாம்பு சட்டைகளை வைத்தனர்; சிலவற்றில் வைக்கவில்லை. இரண்டு வகை கூடுகளையும் காட்டு மரங்களில் பொருத்தி, அருகிலேயே கண்காணிப்பு கேமராவையும் வைத்தனர்.
பொதுவாக பறவைகளின் கூடுகளுக்கு வரக்கூடிய சில விலங்குகளான அணில், பல்லிகள் ஆகியவை வருகின்றனவா என்று கண்காணித்தனர். எந்தெந்த கூடுகளில் எல்லாம் பாம்புகளின் சட்டை இருந்ததோ, அந்தக் கூடுகளுக்கு குறைவாகவே விலங்குகள் வந்தன. பாம்பு சட்டை இல்லாத கூடுகளுக்கு அதிகமான முறை விலங்குகள் வந்தன. பாம்பு சட்டையை பார்த்த விலங்குகள், இங்கு பாம்புகள் நடமாட்டம் இருக்குமோ என்று அஞ்சி தவிர்த்துள்ளன.
இதன் மூலமாக பறவைகள் தங்களுடைய முட்டை, குஞ்சுகளை ஆபத்தான விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் பாம்பு சட்டையை பயன்படுத்துகின்றன என்று தெரிய வந்துள்ளது.