நாம் சமையலுக்கு எண்ணெயைத் தான் பயன்படுத்துகிறோம். நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவையே பிரதானமாக இருக்கின்றன. உலகின் பிற நாடுகளில் எண்ணெயை விட அதிகமாக வெண்ணெயே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
சொல்லப்போனால் வெண்ணெய் தான் பல நேரங்களில் உணவின் சுவையைக் கூட்டுகிறது. ஆனால் இது ஆரோக்கியமானதா என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலை உள்ளிட்ட சர்வதேச பல்கலைகள் இணைந்து ஒரு முக்கியமான ஆய்வை மேற்கொண்டன.
2,21,054 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். அவர்களுடைய 30 ஆண்டு மருத்துவ அறிக்கை பரிசோதிக்கப்பட்டது. அவர்கள் சமையலுக்குப் பயன்படுத்தியது வெண்ணெயா, எண்ணெயா என்பதும் கேட்டு அறியப்பட்டது.
தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில் யார் யாரெல்லாம் ஆலிவ், சோயா பீன்ஸ் முதலியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தினார்களோ அவர்களுக்கெல்லாம் இதயநோய் ஏற்படுகின்ற வாய்ப்பு 16 சதவீதம் குறைவாக இருப்பது தெரிய வந்தது.
அதேபோல யாரெல்லாம் வெண்ணெயைப் பயன்படுத்திச் சமைத்தார்களோ, அவர்களுக்கெல்லாம் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் 12 சதவீதம் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.
எனவே ஒரு நாளில் நாம் பயன்படுத்தும் வெண்ணெயை வெறும் 10 கிராம் மட்டும் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக அதே 10 கிராம் அளவு தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தினால் பலவித நோய்களிலிருந்து விடுபடலாம். இதனால் நமது ஆயுள் 17 சதவீதம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் தாவர எண்ணெய்களில் நிறைவுறாக் கொழுப்பு (Unsaturated fat) உள்ளது. வெண்ணெயில் நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated fats) இருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். இதுவே இதய நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. எனவே, தாவர எண்ணெய் வகைகளே சிறந்தவை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.