உடல் ஆரோக்கியத்திற்கு உணவு எவ்வளவு அவசியமோ அதே அளவு அவசியமானது துாக்கம். சரியான துாக்கம் இல்லாதது மனப்பிரச்னைகளை உருவாக்கும் என்பதை நாம் அறிவோம். அதுபோக உடல்ரீதியாக என்னென்ன பிரச்னைகள் வரும் என்பது பற்றி பல்வேறு ஆய்வுகள் வந்தபடி உள்ளன.
தற்போது குவைத் நாட்டில் உள்ள டிடிஐ எனும் ஆய்வு மையம் துாக்கமின்மையால் ஏற்படும் ஒரு புதுப் பிரச்னையைக் கண்டறிந்துள்ளது.
ஆய்வாளர்கள், ஆரோக்கியமான உடல்வாகு கொண்ட 237 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இவர்களை 24 மணி நேரம் விழித்திருக்கும்படி செய்தனர். இவர்கள் துாங்காமல் இருந்தபோது அவர்களுடைய உடலில் என்சிஎம் (நான் கிளாசிக் மோனோசைட்ஸ் - NCM) செல்கள் அதிகமாகி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அவர்களை வழக்கம் போல சாதாரணமாகத் துாங்கி எழச் சொன்னார்கள்.
அடுத்த இரண்டு நாட்களில் இந்த என்சிஎம் எண்ணிக்கை சராசரியானது. துாக்கமின்மையால் தொடர்ந்து அவதிப்படுபவர்களுக்கு இந்தச் செல்களின் எண்ணிக்கை அசாதாரணமாகவே இருக்கும்.
என்சிஎம் என்பவை ரத்த வெள்ளை அணுக்களில் ஒரு வகை. நம் உடலில் நோய் ஏற்படும்போது இவை பெருகும்.
கிருமிகளை எதிர்த்துப் போராடும். ஆனால் அநாவசியமான நேரங்களில் இவை பெருகுவது நல்லதல்ல. இவற்றின் எண்ணிக்கை நம் உடலில் தொடர்ந்து அதிகரித்தாலும் ஆபத்து.
இதனால் சாதாரண வயிற்று வலி, காய்ச்சலிலிருந்து சில விதமான புற்றுநோய்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே, தொடர் துாக்கமின்மை என்பது மிகவும் ஆபத்தானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
வேலைச் சூழலில் ஏற்படும் மாற்றம், அதிக நேரம் கணினி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளைப் பார்த்தல் ஆகியவற்றால் துாக்கம் கெடுகிறது.
எனவே ஆழ்ந்த உறக்கம் பெற இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்கள் கருத்து.