என்னதான் குடிப்பழக்கம் பல தீமைகளை தருகிறது என்றலும், சிலர் அதை கண்டுகொள்ளாமல், பிடிவாத குணத்தோடு தொடர்ந்து குடித்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் நேரடியாக அறிவுரை சொன்னால், அதை கேட்க மாட்டார்கள். இன்னும் சிலர் எதிர்க்கவும் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களை எப்படி மறைமுகமாக மாற்றலாம்? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
புதிய அனுபவங்களில் அவர்களை ஈடுபடுத்துங்கள்
குடிப்பழக்கத்தை மறக்க வைக்கும் சில இயற்கையான பொழுதுபோக்கு சூழல்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். உதாரணமாக, வெளிப்புறப் பயணங்கள், விளையாட்டுகள், மலையேற்றம் அல்லது மீன்பிடித்தல் போன்ற சாகச நடவடிக்கைகளில் அவர்களுடன் சேர்ந்து ஈடுபடும் போது அவர்களின் கவனத்தைத் திசை திருப்பலாம். இந்த அனுபவங்கள் நேர்மறை உணர்வை அவர்களுக்குள் வளர்க்கும். இதுவே மறைமுகமாக மதுவின் மீதுள்ள அவர்களின் எண்ணத்தை மறக்க வைக்கும்.
குடும்பப் பொறுப்புகளில் அவர்களை ஈடுபடுத்துங்கள்
இன்றைய இளைய தலைமுறையினர் பல பேர் இந்த போதை வலையில் சிக்கி மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்களை திசை திருப்ப நம் குடும்ப சூழ்நிலையையே ஆயுதமாக பயன்படுத்தலாம். உதாரணமாக, அவர்களை வீட்டு பணிகளை நிர்வகிக்கும் பணிகளில் ஈடுபடுத்தலாம். இது சில நேரங்களில் ஒரு பொறுப்பை உணரக்கூடிய நல்ல உணர்வை அவர்களுக்குள் வளர்க்கிறது. மதுவிலிருந்து அவர்களின் கவனத்தையும் மாற்றலாம்.
அவர்களை நேர்மறை எண்ணங்களுடைய மனிதர்களுடன் பழக விடுங்கள்
ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை நடத்தும் நபர்களுடனான பழக்கங்களை ஊக்குவிப்பது அவர்களுக்குள் ஓர் ஆழமான நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். காலப்போக்கில் அந்த நபர்களையே அவர்கள் முன்மாதிரிகளாக மாற்றிக்கொள்வார்கள். இதுபோக தொடர்ச்சியாக அந்த சூழ்நிலையில் இருக்கும் போது சில நேரங்களில் அந்த நபர்களின் பழக்கவழக்கங்களை அவர்களை அறியாமலேயே உள்வாங்கி அதற்கு தகுந்தார் போல மாற வாய்ப்புண்டு.
உணவுமுறை மாற்றங்களை அறிமுகப்படுத்துங்கள்
ஊட்டச்சத்து நிறைந்த உணவு மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை நுட்பமாக மேம்படுத்தும். வைட்டமின்கள் மற்றும் antioxidant நிறைந்த உணவுகள் மது அருந்துவதைக் குறைப்பதில் நேரடியாக செயல்படாது. ஆனால் இதை உண்பதால் அவர்களின் மனநிலையையும், மூளையின் செயல்பாட்டையும் நேர்மறையாக வைத்திருந்து, மதுவின் மீதுள்ள கவனத்தை முற்றிலும் குறைத்து அனைத்தையும் உணவின் மீது திசைதிருப்பும்.
கட்டுரைகள் அல்லது கதைகள்
ஏற்கனவே இந்த வகை போதை பழக்கத்திலிருந்து வெளி வந்தவர்கள் என்னென்ன விஷயங்களை செய்தார்கள் மற்றும் என்னென்ன சாதனைகளை செய்தார்கள் போன்ற சுவாரசியமான கதைகள் ஒரு வித நேர்மறை எண்ணத்தை வர தூண்டும். இது குடிப்பழக்கம் உள்ளவர்களை உணர்வுபூர்வமாக இணைக்கவும், அவர்களை நல்ல முடிவுகளை எடுக்கவும் அனுமதிக்கும்.
மது அல்லாத சமூக கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வையுங்கள்
மதுவை மையமாக கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டிற்கு, ஆல்கஹாலிக் பானங்களுக்கு (alcoholic drinks) பதிலாக கிரியேட்டிவ் மோக்டெயில்கள் (creative mocktails) அல்லது பாரம்பரிய பானங்கள் போன்ற விஷயங்கள் கவனத்தை மது மீது சாய்க்காமல் நல்வகை படுத்தலாம்.
அவர்களின் சிறிய சாதனைகளை கூட கொண்டாடுங்கள்
அவர்களின் முயற்சியால் ஈடேறும் சின்ன சின்ன விஷயங்களை பலரின் முன் பாராட்டி அங்கீகரிப்பது அவர்களின் சுயமரியாதையை அவர்களுக்குள் அதிகரிக்கிறது. காரணம் பாராட்டுக்கள் மற்றும் கிடைக்கும் அங்கீகாரம் நேர்மறை எண்ணங்களை வருவதை வலுப்படுத்துகிறது. காலப்போக்கில் அதுவே படிப்படியாக ஒரு நல்ல வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு அவர்களை மேலும் கொண்டு செல்லும்.
இந்த மறைமுகமான உத்திகள் ஒரு நபரை அவரையே அறியாமல் அவர்களின் வாழ்க்கையை நல்வழி படுத்த உதவுகிறது. குடி குடியை கெடுப்பது போல் போதை பிடியில் மாட்டிக் கொண்டவர்களை மீட்பது கொஞ்சம் கடினம். ஆனால் அனைத்திற்கும் மேலே குறிப்பிட்டதை போல் பல வழிகள் இருக்கின்றன.