கேரளாவில் விவசாயி ஒருவரின் வீட்டில் வளரும் கொங்குநாட்டு வெள்ளாடு ஒன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு இருக்கிறது. பீட்டர் என்பவர் ஆடு, கோழி, பசு உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார்.. அந்த ஆடு 1 அடி 3 அங்குலம் (40.50 செ.மீட்டர்) உயரமும், 1 அடி 1 அங்குலம் (33.5 செ.மீட்டர்) அகலமும் கொண்டதாக இருக்கிறது.இந்த ஆடு தான் உலகில் வாழும் ஆடுகளில் மிகக் குட்டையான ஆடு என அங்கீகாரம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்பவே ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. கன்னி, கறுப்பு, மருக்கை, குரும்பை, கச்சைகட்டி, மேச்சேரி, தலைச்சேரி, நெல்லூர், சென்னை சிவப்பு உள்ளிட்ட இன்னும் பல வகையான நாட்டின ஆடுகள் ஊருக்கு ஏற்றார் போல் வளர்க்கப்படுகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் சுற்று வட்டாரங்களில் வளர்க்கப்படும் குரும்பை ஆடுகள், நீண்ட நெடிய பாரம்பர்யத்தைக் கொண்டவையாக இருக்கின்றன செம்மறியாட்டு வகையைச் சேர்ந்த இந்த ஆடுகள். மேய்ச்சல் மூலம் மட்டுமே வளர்க்கப்படும் ஆடுகளாக இருக்கின்றன. கோவை சுற்றுவட்டார கிராமங்களில் இந்த ஆடுகளை வளர்ப்பவர்கள், மேய்ச்சலுக்காக இவற்றைக் கேரளா வரை ஓட்டிச் செல்வதும் வழக்கம். கேரளாவில் பாலக்காடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
குரும்பை ஆடுக இறைச்சிக்காகவும், கழிவுகள் உரமாக பயன்படுவதாலும், அதன் முரட்டு ரோமம் நல்ல விளைக்கு போவதாலும் அதிக அளவில் கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் வளர்க்கிறார்கள். குரும்பை ஆடுகள் வளர்ப்பில் பாரம்பர்யமாக ஈடுபட்டு வரும் பலர் குறைந்தபட்சம் 50 ஆடுகள் தொடங்கி ஏராளமான ஆடுகள் வரை வளர்த்து, விளைநிலங்களில் கிடைப் போட்டு தொழில் செய்கிறார்கள். இந்த ஆடுகள் பொதுவாகவே சிறியதாக இருக்கும். ஆனால் கேரளாவில் விவசாயி ஒருவரின் வீட்டில் வளரும் வெள்ளாடு ஒன்று பலரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் மிகச்சிறியதாக உள்ளது.
ஆடு, கோழி, பசு உள்ளிட்டவைகளை வளர்த்து வரும் பீட்டர் என்பவர் தனது தோட்டத்தில் 'கரும்பி' என்ற இந்த 'பெட்டை' ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். 4 வயதான இந்த ஆடு, இயல்பைவிட மிக சிறிதாக இருப்பதை பீட்டர் உணர்ந்தார். எனவே உள்ளூர் கால்நடை டாக்டர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்துள்ளார்
கின்னஸ் குழுவினர் நேரில் வந்து பீட்டரின் ஆட்டை அளந்து பார்த்தனர். அப்போது அந்த ஆடு 1 அடி 3 அங்குலம் (40.50 செ.மீட்டர்) உயரமும், 1 அடி 1 அங்குலம் (33.5 செ.மீட்டர்) அகலமும் கொண்டதாக இருந்துள்ளது. மேலும் உலகில் வாழும் ஆடுகளில் மிகக் குட்டையான ஆடு என அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோவை கின்னல் அமைப்பு சமூக வலைத்தளத்தில் வெளியிடவே, 'கரும்பி' அனைவரையும் கவர்ந்து வேகமாக பரவி வருகிறது.