வெரிகோஸ் வெயின் சுருள் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு ரத்த குழாய்கள் சம்பந்தமான பாதிப்பு. இந்த பிரச்சனை இருந்தால் காலின் பின் புறத்தில், ரத்த குழாய்கள் காலில் வீங்கி புடைத்து சுருண்டு காணப்படும். இது, வயது, உடல் பருமன், நின்று கொண்டே வேலை செய்தல் போன்ற காரணங்களால் ஏற்படும். நமது முழங்காலுக்கு கீழே பின்புறத்தில் உள்ள ரத்த குழாய்கள் முடிச்சுட்டு வலிகளை உண்டாக்குகின்றன.
இவை ரத்த ஓட்டத்தை தடை படுத்துகிறது. நமது இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களுக்கு சிரைகள் (Vein) என்று பெயர். ரத்த குழாய்கள் புடைத்து வீங்கும் போது ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதை தான் வெரிகோஸ் நோய் என்று குறிப்பிடுகிறார்கள்.
அறிகுறிகள் என்னென்ன?:
வீங்கிய மற்றும் ஊதா நிற நரம்புகள்
நரம்பை சுற்றி அரிப்பு அல்லது எரிச்சல்
நரம்பை சுற்றியுள்ள தோலில் நிறம் மாறுபடுதல்
கால் வீக்கம், வலி
கால் மற்றும் பாதம் கனமாக இருப்பது போன்ற உணர்வு
தூங்கும் போது தசைப்பிடிப்பு
வெரிகோஸ் வெயின் எதனால் ஏற்படுகிறது?:
நாம் பார்க்கும் வேலைகள்: நாள் முழுவதும் நின்று கொண்டோ வேலை செய்யும் நபர்களுக்கு வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. நாள் முழுவதும் நிற்கும் போது, ரத்த குழாய்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. அதே போல, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது ரத்த ஓட்டத்தை தடை படுத்தக் கூடும். அதனால், அவ்வப்போது கால்களுக்கு அசைவு கொடுக்க வேண்டும்.
தசை இழப்பு: தசையின் அடர்த்தியை நீங்கள் இழக்கும் போது தசை இடைவெளிகள் உருவாகி, ரத்த குழாய் புடைப்பு சுருளுக்கு காரணமாகிறது. பின்னர், நரம்புகள் வீங்கி வலியை ஏற்படுத்தும். இதனால், ரத்த ஓட்டம் ஆங்காங்கே தடைப்படும் சூழல் உருவாகும். அதனுடன், ரத்தம் மேல் நோக்கி தள்ளப்படும். சில நேரங்களில், ரத்த குவிப்பு ஏற்பட்டு ரத்த கசிவு ஏற்படும். ஆரம்ப நிலையில் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த பிரச்சனையை கவனிக்காமல் விட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சுழல் உண்டாகும்.
தீர்வு என்ன?:
உடல் எடையை சீராக வைப்பது
உடற்பயிற்சியில் ஈடுபடுவது
தொடர்ந்து நிற்பது மற்றும் அமர்ந்திருப்பதை தவிர்ப்பது
தொடர்ந்து ஹீல்ஸ் போடுவதை தவிர்ப்பது
புகை பிடிப்பதை நிறுத்துவது போன்ற வாழ்க்கை மாற்றங்கள் வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரி செய்வதாக NIH இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலியை குறைப்பது எப்படி?: உட்கார்ந்திருக்கும் போது அல்லது படுக்கும் போது கால்களை உயர்த்துவது, கால்களுக்கு மசாஜ் செய்வது, சுருக்க காலுறைகளை அணிவது போன்றவற்றை செய்வதன் மூலம் வெரிகோஸ் வெயின் வலியை சமாளிக்கலாம்.