மெத்தில் மெர்குரி (Methyl mercury) என்பது மிக மோசமான நச்சுப்பொருள். நிலக்கரியை எரிக்கும் போது இது வெளிப்படும். அதேபோல் தொழிற்சாலை கழிவுகளிலும் இருக்கும்.
அவற்றைச் சுத்திகரிக்காமல் நீர்நிலைகளில் கொட்டுவதால், அங்கு வாழும் மீன்களின் உடல்களில் நுழைகிறது. இந்த மீன்களை மனிதர்கள் உட்கொண்டால், அவர்களுடைய உடலிலும் இந்த நச்சு சேர்ந்து விடும்.
இது நரம்பு மண்டலத்துக்கும் ஆபத்தானது. எனவே இந்தக் கழிவை அகற்றுவதற்கான சிறந்த வழியை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.
தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மக்வாரி பல்கலை (Macquarie University) ஆய்வாளர்கள் ஜீப்ரா மீன்களையும் சில பூச்சிகளையும் கொண்டு, இந்தக் கழிவுகளை நீக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். அதாவது, முதலில் மீன்கள், பூச்சிகளின் டிஎன்ஏவில் ஈ.கோலை (E. coli) பாக்டீரியாவின் மரபணுக்களைச் செலுத்துவர்.
இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட மரபணுக்களை உடைய மீன்கள், நீர்நிலைகளில் உள்ள மெத்தில் மெர்குரியை உட்கொண்டு அதைச் சாதாரண பாதரச வாயுவாக மாற்றிவிடும்.
இந்த வாயு மெத்தில் மெர்குரியை விடக் குறைவான ஆபத்தையே ஏற்படுத்தும். இந்தப் பாதரசம் மீன்களின் உடலில் தாங்காது என்பதால், மீன்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பில்லை. இந்த மீன்களை உரிய நீர் நிலைகளில் நேரடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு முன்பாக, இன்னும் சில ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
அவற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே இவற்றை நாம் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.