நார்ச்சத்து மிகுந்த பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் பனங்கிழங்கு. பனங்கிழங்கு கிடைக்கக்கூடிய பருவத்தில் அதை அதிக அளவில் உண்ண வேண்டும் என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பனங்கிழங்கை பலரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகள் அதை சாப்பிட மறுப்பார்கள். அவர்களும் பனங்கிழங்கை சாப்பிட பனங்கிழங்கை வைத்து சப்பாத்தியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
பனங்கிழங்கு – 6
கோதுமை – ஒரு கப்
துருவிய கேரட் – ஒரு கப்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு -
செய்முறை முதலில் ஒரு பனங்கிழங்கை 3.4 துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு நல்ல தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதை குறைந்த தீயில் வைத்து 15 நிமிடம் வேக விட வேண்டும். பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி தண்ணீரை விட்டு பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். கிழங்கு நன்றாக ஆரிய பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு அதன் நடுப்பகுதியில் இருக்கக்கூடிய நரம்பையும் நீக்கிவிடுங்கள். பிறகு இந்த பனங்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதில் இருக்க கூடிய நாறு பகுதியை நீக்கிவிட வேண்டும். இந்த சிறு சிறு துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக அளவில் தண்ணீர் ஊற்றக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது இந்த பனங்கிழங்கு விழுதில் கோதுமை மாவு, துருவிய கேரட், கொத்தமல்லி தலை, தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ள வேண்டும். ஒருவேளை தண்ணீர் அதிகமாக போய்விட்டால் சற்று அதிகமாக கூடுதலாகவே கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளலாம். இப்படி சப்பாத்தி மாவு பதத்திற்கு நாம் பிணைந்த பிறகு இதை எப்பொழுதும் சப்பாத்தி தேய்ப்பது போலவே தேய்த்து தோசை கல்லை அடுப்பில் வைத்து தேய்த்த சப்பாத்தியை அதில் போட வேண்டும். ஒரு புறம் லேசாக சிவந்த பிறகு அதை திருப்பி போட்டு மறுபுறமும் சிவக்க விட வேண்டும். மறுபுறமும் சிவந்த பிறகு இரண்டு புறமும் எண்ணெயை ஊற்றி நன்றாக தடவி சுட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பனங்கிழங்கு சப்பாத்தி தயாராகி விட்டது. இதையும் படிக்கலாமே:தக்காளி தோசை செய்முறை சாதாரணமாக சப்பாத்தி செய்வதற்கு பதிலாக இந்த முறையில் பனங்கிழங்கை வைத்து சப்பாத்தி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும் உடலுக்கு தேவையான சத்தும் கிடைத்து விடும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.