ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகிறது. மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அன்று முதல் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிற காலகட்டம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தென் நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். சனி ராகுவின் சேர்க்கை பல அதிர்ச்சியான விஷயங்களையும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் கன்னி ராசியினர் பெறும் நல்ல பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் 7 ஆம் இடத்தில் இருந்து ராசியைப் பார்க்கிறார். நீச்ச நிலையில் பார்த்தாலும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்ல முன்னேற்றம், லாபம் உண்டாகும். திருமண விஷயத்தில் சரியான வரன் அமையவில்லை என்றால் இனிமேல் சரியான வரன் அமையும்.
7, 9 சுக்கிரன் அமர்ந்திருப்பது நல்ல திருமண யோகத்தை தரும். கடைசி நேரத்தில் மணமகன், மணமகள் மாற்றம் உண்டாகக்கூடிய வாய்ப்பு உண்டு. மாற்றம் அமைகிற நேரமாக இருக்கும். வெளிமாநிலம், வெளிநாடு, வேலை மாறும் வாய்ப்பு உண்டு. 7 ஆம் இடம் வலுப்பதால் வாழ்க்கைத் துணை மற்றும் தொழில் பார்ட்னர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணைக்கு உங்கள் மீது அதிருப்தி, அதீதமான குண மாறுதல் ஏற்படலாம். உங்களுடைய செயல்பாடுகள் அவரை பாதிக்கும். அன்பாக நடந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
தொழில் கூட்டாளியுடன் பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மனதுக்குள் ஒரு தவிப்பு, கொந்தளிப்பு உண்டாகும். தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் சொத்து வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வெளிநாடுகளில் வண்டி வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன வாக்கு குடும்ப ஸ்தானதிபதி சுக்கிரன் 7 இல் உட்கார்ந்திருப்பதால் திருமணம் கைகூடி வரும்.
நல்ல பண வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். அலைந்து திரிந்து சம்பாதிக்க கூடிய வாய்ப்பு உண்டாகும். இதன் மூலம் கூடுதல் தொகையை சம்பாதிப்பீர்கள். குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் தாயாரின் உடல்நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கொஞ்சம் முன்னேற்றம் ஏற்படும்.
ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலருக்கு காதல் கூடும். சிலருக்கு காதலே மாறும். காதல் திருமணங்கள் கைகூடுவதற்கான யோகங்கள் உண்டு. வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், விசா பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். எதிர்பார்க்கக்கூடிய வேலைகள் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.
வழிபட வேண்டிய தெய்வம் - நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு அருமையான பலன்களைத் தரும். 6 ஆம் இடத்தில் இருக்கும் சனி 7 ஆம் இடத்துக்குச் செல்வதால் வேலை செய்யும் இடத்தில் எதிர்த்துப் பேசுவதை, கடினமாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இருக்கும் வேலையை பாதுகாத்துக் கொள்வது நல்லது.
அன்னை புதுக்கோட்டை புவனேஸ்வரி வழிபாடு உங்களுக்கு அருமையான வெற்றியைத் தரும். சளி தொந்தரவு, காது மூக்கு தொண்டை பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதில் கவனமாக இருக்க வேண்டும்.