கோடைக்காலம் வந்துவிட்டாலே தர்பூசணிக்கு மவுசு கூடிவிடும். சுவையான, நீர்ச்சத்து நிறைந்த இந்த பழம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆனால், தர்பூசணியில் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு உதவும் ரகசியங்கள் பல உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள், அதுகுறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.
பொதுவாக ஆண்களின் பாலியல் திறன் அவர்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவைப் பொறுத்தது. இந்த ஹார்மோன் செயல்பாட்டில் துத்தநாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தர்பூசணி விதைகளில் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது. இதனை உட்கொள்வது ஆண்களின் பாலியல் ஆர்வத்தை அதிகரிக்க உதவும். மேலும், விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தி, ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்கவும் தர்பூசணி உதவுகிறது.
தர்பூசணி ஆண்களின் பாலுறவு வாழ்வில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான விறைப்புச் செயலிழப்பை சரிசெய்ய உதவுகிறது. ஆண்குறிக்கு இரத்த ஓட்டம் குறைவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. தர்பூசணியில் உள்ள சிட்ருலின் என்ற அமினோ அமிலம் உடலில் அர்ஜினைனாக மாற்றப்படுகிறது. இது ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
2013 ஆம் ஆண்டு எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், தர்பூசணியில் காணப்படும் சிட்ருலின் விறைப்புத் திறனை மேம்படுத்துவதோடு, ஆண்குறிக்கு ரத்த விநியோகத்தையும் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. சியாங் மாய் யுனிவர்சிட்டி ஜர்னல் ஆஃப் நேச்சுரல் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு பாலியல் ஆர்வம் மற்றும் திறன் அதிகரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தர்பூசணியை இயற்கை வயாகரா என்று அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை.
தர்பூசணி என்றதும் நம் நினைவுக்கு வருவது அதன் சிவப்பு நிற சதைப்பகுதிதான். ஆனால், அந்த சிவப்பு நிற சதைப்பகுதியை ஒட்டியுள்ள வெள்ளை நிற சதைப்பகுதிதான் ஆண்களின் பாலியல் சக்தியை அதிகரிக்கும் வல்லமை படைத்தது என்பது பலருக்கும் தெரியாத தகவல்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, தர்பூசணியை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதிகமாக உட்கொள்வது உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். மேலும், சிலருக்கு அதிக தர்பூசணி சாப்பிடுவதால் தோல் அரிப்பு, உதடு வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேநேரம் செயற்கையாக கலர் ஊட்டப்பட்டதா என்பதை செக் செய்து வாங்குங்கள். சிவப்பாகத்தான் வேணும் என்று கண் காட்டு பாதையில் பயணிக்காதீர்கள். சிவப்பாக காட்டத்தான் செயற்கை ஊசிகள் போடுகிறார்களாம். எனவே பார்த்து வாங்குங்கள் மேலும், கோடை காலத்தில் தர்பூசணியை மிதமான அளவில் உட்கொண்டு அதன் பலன்களைப் பெறுங்கள்.