பால் மற்றும் சிவப்பு சந்தனம் கொண்டு வீட்டிலேயே ஃபேஸ்பேக் தயாரித்துக் கொள்ள முடியும். இதனை பயன்படுத்தி நம் முகத்தை சுலபமாகவே பொலிவாக்கலாம். அதற்கான செய்முறையை தற்போது பார்ப்போம்.
இன்றைய சூழலில் சரும பராமரிப்பு என்பது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய விடயமாகும். அதிலும், அதிகரித்து வரும் மாசுபாடு நம் சரும ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கி விடும். குறிப்பாக, தற்போது கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில், நம் முகம் வறட்சியாகி கருமையாக தோற்றமளிக்கும்.
சரும பராமரிப்பை அழகு சார்ந்த விஷயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நம் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கும். அந்த வகையில் வெயிலில் இருந்து நம் முகத்தை பாதுகாக்க சில வழிமுறைகளை நாம் பின்பற்றலாம்.
இதற்கு என ஃபேஸ் கிரீம் அல்லது சீரம் போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு பொருட்களை மட்டுமே வைத்து நம் வீட்டிலேயே இயற்கையான ஃபேஸ்பேக்கை தயாரிக்க முடியும். அதன் செய்முறையை பார்க்கலாம்.
ஒரு ஸ்பூன் அளவிற்கு சிவப்பு சந்தனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் சிறிதளவு காய்ச்சாத பச்சைப் பாலை சேர்த்து பசை பதத்திற்கு நன்றாக கலக்க வேண்டும். பாலுக்கு மாற்றாக தேனையும் இதில் கலந்து கொள்ளலாம். ஆய்லி ஸ்கின் இருப்பவர்கள் அதற்கு பதிலாக ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம்.
இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் தடவி விட்டு சிறுது நேரம் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகம் பார்ப்பதற்கு பொலிவாக மாறி விடும். மேலும் இந்த ஃபேஸ்பேக், முகம் வறண்டு போவதையும் தடுக்க உதவி செய்கிறது. எனவே, வெயில் காலத்தில் சருமம் வறட்சியாவதை தடுக்க இதனை பயன்படுத்தலாம்.