இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ இருக்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இது சிம்ம ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். ராகு - கேது ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் சராசரியாக 2.25 வருடத்தில் இருந்து மூன்று வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். இந்த 2025 வருடத்தில் இந்த நான்கு கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன.
மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது சிம்ம ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை காணலாம்.
சிம்மம்: கண்டக சனி நிவர்த்தியாகி அஷ்டம சனி வரப்போகிறது. உங்கள் ஏழாம் இடத்தில் ராகுவும், ஜென்ம ராசியில் கேதுவும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த மூன்றுமே உங்களுக்கு கஷ்டத்தை தரும் அமைப்பு தான். குரு பத்தாம் இடத்தில் இருந்து 11 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆவது மட்டுமே ஓரளவுக்கு நல்ல பலன்களை தரப்போகிறது.
வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு இந்த காலத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனைப்பட்டவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பும் நன்றாக உள்ளது. அது சார்ந்த மருத்துவ சிகிச்சையில் இருந்தால் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வருமானம் சீராக இருக்கும். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான சூழல் உள்ளது. குரு பகவானால் பொருளாதார நெருக்கடி சற்றே குறையும். பணப்புழக்கம் ஓரளவுக்கு இருந்தாலும் பெரியளவுக்கு சேமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது. குரு பகவானால் அவ்வப்போது திடீர் அதிர்ஷ்டங்கள் உருவாகும். லாட்டரி சீட்டில் லாபம் கிடைக்கும்.
எதிர்பாராத நேரத்தில் உதவி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. திருமண தடையால் அவதிப்பட்டவர்களுக்கு இந்த காலத்தில் எதிர்பார்த்தபடி திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. காதல் உறவில் இருப்பவர்களுக்கு சில பல பிரச்னைகளுக்கு பிறகு திருமணம் நடைபெறுவதற்கான சூழல் நன்றாக உள்ளது.
ஜென்ம ராசியில் கேது பகவான் வருவதால் மனக்குழப்பம், சங்கடங்கள் ஏற்படும். உத்யோகத்தில் ஏராளமான பிரச்னைகள், சவால்களை சந்திக்க நேரிடும். பணிச்சுமை அதிகரிக்கும். உடன் பணியாற்றுவோரிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். சிலருக்கு வேலை பறிபோகும் வாய்ப்பும் உள்ளது. எனவே பணியில் கவனமாக இருப்பது நல்லது.
கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்: எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டும். அஷ்டம சனியால் தொழிலில் கடன் சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய முதலீடு போடாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்க்கவும். உயரதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.
வாழ்க்கை துணையுடன் வீண் விவாதங்களை தவிர்த்து விட்டு செல்வது நல்லது. இல்லையென்றால் பிரிவுகளை சந்திக்க நேரிடும். வாகனத்தில் மிகுந்த கவனமாக பயணிக்க வேண்டும். முதியவர்கள் தங்களின் மருத்துவத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். புதிய கடன் வாங்க வேண்டாம். இருப்பதை தக்க வைத்துக் கொள்வது சாமர்த்தியம்.